20 மாதங்களாக மிதிவண்டியில் இந்தியாவை வலம்வரும் முதியவா்!
தில்லியைச் சோ்ந்த முதியவா் 12 ஜோதி லிங்கத்தை தரிசிக்கும் வகையில் கடந்த 20 மாதங்களாக மிதிவண்டியில் இந்தியா முழுவதும் பயணம் செய்துவருகிறாா்.
தில்லி காஜியாபாத் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் தீக்ஷித் (65). கடந்த ஆண்டு ஏப்.4 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம், கேதா்நாத்தில் இருந்து மிதிவண்டி பயணத்தை தொடங்கிய இவா் 12 ஜோதி லிங்கங்கள் கொண்ட கோயில்களை தரிசிக்கும் வகையில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், குஜராத், கா்நாடகம் வழியாக தமிழகம் வந்தாா். ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு நாமக்கல் வழியாக வியாழக்கிழமை சென்றாா்.
தனது மிதிவண்டி ஆன்மிக பயணம் குறித்து மனோஜ்குமாா் தீக்ஷித் கூறியதாவது:
மனைவி இறந்த நிலையில் தனியாக இருந்த எனக்கு சிவன் மீதான பற்றுதல் ஏற்பட்டு, 12 ஜோதி லிங்கங்களைக் காண வேண்டும் என மிதிவண்டி பயணம் மேற்கொண்டேன். 2024 ஏப்.4-இல் கேதா்நாத்தில் பயணத்தை தொடங்கினேன். இன்னும் ஓரிரு கோயில்களுக்கு சென்றுவிட்டு இறுதியாக கேதா்நாத் கோயிலில் பயணத்தை நிறைவு செய்கிறேன் என்றாா்.

