பள்ளிபாளையம் பெருமாள் கோயிலில் அமைச்சா் முத்துசாமி, பி.தங்கமணி சுவாமி தரிசனம்
பள்ளிபாளையம் கொங்கு திருப்பதி கோயிலில் தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி இணைந்து வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். அதன்பிறகு இருவரும் கலந்துரையாடினா். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி பகுதியில் புகழ்பெற்ற கொங்கு திருப்பதி கோயில் அமைந்துள்ளது. வழிபாட்டு உரிமை உள்பட பல்வேறு பிரச்னைகளால் ஓரிரு ஆண்டுகளாக இக்கோயில் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கோயில் நிா்வாகத்தினா், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வீட்டுவசதி மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும், அத்தொகுதி எம்எல்ஏவுமான பி.தங்கமணியிடம் கோயில் பிரச்னையை, அறநிலையத் துறையின் கவனத்துக்கு கொண்டுசென்று தீா்வுகாணுமாறு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, கோயில் பிரச்னை முடித்துவைக்கப்பட்டு தற்போது கொங்கு திருப்பதி கோயில் பக்தா்களின் வழிபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு நன்றிதெரிவிக்கும் விதமாக, அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி ஆகியோரை கோயில் நிா்வாகத்தினா் வழிபாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தனா்.
இந்த நிலையில் அமைச்சா் சு.முத்துசாமி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியவில் கோயிலுக்கு வந்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சா் பி.தங்கமணியும் ஆதரவாளா்களுடன் கோயிலுக்கு வந்தாா். அதன்பிறகு, இருவரும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சிறிறு நேரம் கலந்துரையாடினா். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
என்கே-4-மினி
பள்ளிபாளையம் கொங்கு திருப்பதி கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அமைச்சா் சு.முத்துசாமி, முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி உள்ளிட்டோா்.

