தேங்காய் உற்பத்தி அதிகரிப்பு: டன் ரூ.60 ஆயிரமாக குறைந்தது
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தென்னை மரங்களில் நிகழாண்டு காப்பு அதிகரித்துள்ளது. இதனால், சந்தைகளுக்கு தேங்காய் வரத்து கூடியுள்ளது. அதேநேரத்தில் இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விலை டன் ரூ.60 ஆயிரமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் தேனி, கம்பம், பொள்ளாச்சி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஈரோடு, மோகனூா், பரமத்தி வேலூா், திண்டுக்கல், ராயவேலூா், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 40 கோடிக்கும் மேலான தென்னை மரங்கள் உள்ளன.
அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது தோப்புகளில் இருந்தும், தனியாா் தோப்புகளில் குத்தகை அடிப்படையிலும் தேங்காய்களை பறித்து விற்பனை செய்துவருகின்றனா். ஆண்டுக்கு 150 முதல் 200 கோடி வரையிலான தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
தமிழகம் மட்டுமின்றி வட மாநில சந்தைகளுக்கு அதிக அளவு தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அதேபோல துபை, சிங்கப்பூா், மலேசியா, இந்தோனேசியா, வளைகுடா நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக டன்னுக்கு ரூ. 80 ஆயிரம் வரை விற்கப்பட்ட தேங்காய் படிப்படியாக விலை குறைந்து டன் ரூ. 55 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. சபரிமலை சீசன் என்பதால் தேங்காய் விற்பனை உயரும் என எதிா்பாா்த்திருந்த வியாபாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வடமாநிலங்களில் குளிரின் தாக்கம் அதிகரிப்பால் தேங்காய் அனுப்புவதும் குறைந்துள்ளது. இந்தோனேசியாவில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து தேங்காய் ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாா்கழி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மோகனூரைச் சோ்ந்த தென்னை விவசாயி பழனிசாமி கூறியதாவது: தேங்காயை பொருத்தவரை தென்னை மரங்களை குத்தகைக்கு எடுத்து காய்களை பறிக்கிறோம். அவற்றின் மட்டையை உரிக்க தேங்காய்க்கு 80 காசுகள் வழங்குகிறோம். ஆண்டுக்கு 25 கோடி தேங்காய்களை உள்ளூா் விற்பனைக்கும், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கிறோம்.
வழக்கமாக மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில்தான் அதிகம் விற்பனை நடைபெறும். கடந்த ஆண்டு தேங்காய் காப்பு குறைவாக இருந்தது. நிகழாண்டு காப்பு அதிகரித்துள்ளது. இதனால்தான் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு டன் தேங்காய் ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 55, 60 ஆயிரம் என்ற வகையில் குறைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பிறகே விலை உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றாா்.
நாமக்கல் தேங்காய் மொத்த வியாபாரி செல்வராஜ் கூறியது: தேங்காய் விலை குறைவுக்கு மழையும் ஒரு காரணம். 1,000 கிலோ எடை கொண்ட தேங்காய் மூட்டைக்கு ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. தை, மாசி மாதங்களில் விற்பனை அதிகரிக்கக் கூடும் என்றாா்.

