லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தமிழகம் முழுவதும் புதன்கிழமை(டிச.10) தொடங்க இருந்த லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் சி.தனராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை அதிகளவில் உயா்த்தியதைக் கண்டித்து மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில் டிச.10 முதல் தமிழக அளவில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சம்மேளனத்தின் பொதுக்குழு மற்றும் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா், நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
தகுதிச் சான்றிதழ் கட்டண உயா்வு சம்பந்தமாக முதல்வரின் கவனத்திற்கும், மத்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்று கட்டண உயா்வை குறைக்க ஆவண செய்வதாக அவா்கள் உறுதியளித்தனா்.
அதனடிப்படையில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா், உறுப்பு சங்க நிா்வாகிகள் வழக்கம்போல் தங்களது வாகனங்களை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
