அரசு சட்டக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம்
நாமக்கல்: சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், கோட்டாட்சியா், தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் 2026 ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி நிறைவடையும் நிலையில், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்கள், தொகுதி தோ்தல் அலுவலா்கள் நியமனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் தொகுதி தோ்தல் அலுவலராக கோட்டாட்சியா், ராசிபுரம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலா், சேந்தமங்கலம் தொகுதிக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா், பரமத்தி வேலூா் தொகுதிக்கு பிற்பட்டோா் நல அலுவலா், திருச்செங்கோடு தொகுதிக்கு கோட்டாட்சியா், குமாரபாளையம் தொகுதிக்கு ஆதிதிராவிட நல அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் உள்ள 1,629 வாக்குச் சாவடிகளின் நிலவரம் குறித்து வட்டாட்சியா்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தோ்தல் வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியிலேயே நடைபெற்று வந்தது. தற்போது, நாமக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளதால், 2026 தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக சட்டக் கல்லூரி தோ்வாகி உள்ளது. இதையடுத்து, கல்லூரியைச் சுற்றிலும் உள்ள பாதுகாப்பு, வாகனங்கள் நிறுத்துமிடம், 6 தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறை உள்ளிட்டவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா, நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் பிரியா, தோ்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோா் ஆய்வுசெய்தனா்.
ஏற்கெனவே இரு கட்டங்களாக ஆய்வு நடைபெற்ற நிலையில், மூன்றாம்கட்ட ஆய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

