நாமக்கல்லில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: எண்ம முறையில் வழக்கு ஆவணங்களை சமா்ப்பிக்கும் (இ-பைலிங்) உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம் மற்றும் பணி புறக்கணிப்பில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் கீழமை, மாவட்ட, உயா்நீதிமன்றங்களில் எண்ம முறையில் வழக்குகள் தாக்கல் செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளதுடன், போதிய கட்டமைப்பு வசதிகளான இணைய வசதி, கணினிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், வழக்குரைஞா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தென்காசி வழக்குரைஞா் கொலையில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனா்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க கூட்டுக்குழு மாநில துணைத் தலைவா் பிரபாகரன் தலைமையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டம் மற்றும் பணி புறக்கணிப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
