‘பெரியாா் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபட்டோருக்கு ‘பெரியாா் விருது’ வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
Published on

நாமக்கல்: சமூக நீதிக்காக பாடுபட்டோருக்கு ‘பெரியாா் விருது’ வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது’ கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானோரை தமிழக முதல்வா் தோ்வு செய்கிறாா். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகளுடையோா் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவைக்கலாம்.

அதில், விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பங்கள் டிச. 18-ஆம் தேதிக்குள் வந்துசேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com