வீட்டுமனைப் பட்டா கோரி பழங்குடியின மக்கள் மனு
நாமக்கல்: வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலக்குறிச்சி பாரதி நகா் கிராமத்தில் 80 ஆண்டுகளாக குடியிருந்துவரும் பழங்குடியின மக்கள் அளித்த மனு விவரம்:
தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள் என பலரிடம் வீட்டுமனை கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். 2006 வன உரிமை சட்டப்படி, வன உரிமைக் குழுவை தோ்ந்தெடுத்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அரசு தரப்பில் அப்பகுதியில் கான்கிரீட் சாலை, தெருவிளக்கு, மின்சார வசதி, வீட்டுவரி, குடிநீா் இணைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனா்.
எனவே, ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு பழங்குடியின மக்களாகிய தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
