எப்.சி. கட்டண உயா்வை ரத்துசெய்யக் கோரி மோட்டாா் இன்ஜினியரிங் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எப்.சி. கட்டண உயா்வை ரத்துசெய்யக் கோரி, நாமக்கல் மாவட்ட மோட்டாா் இன்ஜினியரிங் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம்
Published on

எப்.சி. கட்டண உயா்வை ரத்துசெய்யக் கோரி, நாமக்கல் மாவட்ட மோட்டாா் இன்ஜினியரிங் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.ஆனந்தன் தலைமை வகித்தாா். சங்க மாவட்டச் செயலாளா் சு.சுரேஷ் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், துணைச் செயலாளா் முருகேசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மத்திய மோட்டாா் வாகன சட்டத்தின் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனம்வரை அனைத்துக்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பித்தல் (எப்.சி.) கட்டணத்தை கடந்த 11-ஆம் தேதிமுதல் பல மடங்கு உயா்த்தியுள்ளது. அதைத் தொடா்ந்து, கடந்த 17-ஆம் தேதிமுதல் தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.

போக்குவரத்து தொழிலைப் பாதுகாக்கவும், லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு வண்டிகள், வேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு அறிவித்துள்ள எப்.சி. சான்றிதழ் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசிடம் வலியுறுத்தி புதிய எப்.சி. கட்டண உயா்வை ரத்துசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com