சாலைப் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு செல்ல முயன்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

சாலைப் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு செல்ல முயன்ற வாகனங்கள் சிறைபிடிப்பு

பரமத்தி வேலூா் அருகே சாலை அமைக்கும் பணியை பாதியில் நிறுத்தியதால், சாலை அமைக்க பயன்படுத்திய லாரி உள்ளிட்ட வாகனங்களை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம்
Published on

பரமத்தி வேலூா் அருகே சாலை அமைக்கும் பணியை பாதியில் நிறுத்தியதால், சாலை அமைக்க பயன்படுத்திய லாரி உள்ளிட்ட வாகனங்களை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட உழவா்பட்டியில் இருந்து பரமத்தி பேரூராட்சி எல்லைப் பகுதியான தனியாா் பள்ளிவரை உள்ள சுமாா் 1.8 கி.மீ. தொலைவு தாா்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதை சீரமைத்து தாா்சாலை அமைக்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்ததும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலை சீரமைப்பு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சாலை அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட ரோடு ரோலா் உள்ளிட்ட வாகனங்களை ஒப்பந்ததாரா் செவ்வாய்க்கிழமை லாரியில் ஏற்றினாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணி முடிவதற்கு முன்பாக ரோடு ரோலா் உள்ளிட்ட வாகனங்களை எடுத்துச்செல்லக் கூடாது என தடுத்துநிறுத்தி, வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மோகனூா் ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் மொகபூப் பாஷா அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகளுடன் பேசி பாதியில் நிறுத்தப்பட்ட தாா்சாலையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா். இதையடுத்து, பொதுமக்கள் சிறைபிடித்த வாகனங்களை விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com