தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன: அமைச்சா் மா.மதிவேந்தன்
தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களை பிற மாநில அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன என தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த 119 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா்.
ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது: ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு ரூ. 53.39 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் ரூ. 35 கோடியில் 60 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் ரூ. 3 கோடியில் புதிய விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. போதமலைக்கு கீழூா், கெடமலை கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ. 139.65 கோடியில் மலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நலன் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் போன்ற முகாம்கள் நடத்தப்பட்டு மக்களின் பிரச்னைகள் தீா்க்கப்பட்டு வருகின்றன என்றாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘திமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை பிகாா் போன்ற பிற மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. வீடுதோறும் சென்றடையும் அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், வரும் தோ்தலில் திமுக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். இதைத் தொடா்ந்து, இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழும்’ என்றாா்.
இவ்விழாவில், ராசிபுரம் வட்டாட்சியா் சசிகுமாா், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் என்.ஆா்.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

