15 ஆண்டுகளான வாகனங்களை அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்
15 ஆண்டுகளான வாகனங்களை அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. வலியுறுத்தினாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அவா் மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பேசியதாவது:
15, 20 ஆண்டுகளுக்கும் மேலான காா்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட மோட்டாா் வாகனங்களை அகற்றிவிட்டு, புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக பழைய மோட்டாா் வாகனங்களுக்கு ஆண்டு புதுப்பித்தல் சான்று (எப்.சி.) பெறுவதற்கான கட்டணம் பன்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளை கட்டாயமாக அகற்றி விற்பனை செய்வதன் மூலம் ஏராளமான லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்தியாவில் சரக்கு போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் லாரிகளில் கூண்டின் திறன் கட்டமைப்பு கொண்டுள்ளதாக உள்ளது. மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பழைய இன்ஜின்கள்தான்.
எனவே, பழைய லாரிகளை முழுமையாக அகற்றாமல், மாசுபடுத்தும் இன்ஜின்களை மட்டும் மாற்றினால் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும். வாகன உரிமையாளா்களுக்கு செலவு குறையும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சா் இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளில் பழைய இன்ஜினை மட்டும் மாற்றி, அதாவது புதிய பிஎஸ்-6 சான்று அளிக்கப்பட்ட இன்ஜினை பொருத்தி பழைய லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும். முழுமையாக லாரிகளை அகற்ற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
