அரசு சட்டக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையமாக தோ்வாகி உள்ள நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
Published on

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையமாக தோ்வாகி உள்ள நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,629 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. 2026 சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையமான நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி, காவல் கண்காணிப்பாளா் சு.விமலா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளா்கள், முகவா்கள் வாக்கு எண்ணும் பணியை பாா்வையிடுவதற்கான வசதிகள், வாகனங்களில் வந்து செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள், பணியாளா்களுக்கு தேவையான மேசை, நாற்காலிகள், குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் ஊடகப் பிரிவினா் வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தி சேகரிக்க ஏதுவாக ஊடக மையம் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான இடவசதி ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், தனி வட்டாட்சியா் (தோ்தல்) செல்வராஜ், பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் பிரியா, சட்டக் கல்லூரி முதல்வா் அருண் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com