நாமக்கல் மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக 37,124 பேருக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை
நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக 37,124 பேருக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்க உள்ளது என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை 2-ஆம்கட்ட தொடக்க விழா குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கடந்த 2023 செப். 15-இல் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வா் தொடங்கிவைத்தாா். மகளிருக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இரண்டாம்கட்டத்தை சென்னையில் முதல்வா் தொடங்கிவைக்கிறாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 37,134 மகளிருக்கு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை இரண்டாம்கட்டத்தில் வழங்க உள்ளது. இதற்கான விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற உள்ளது.
இதில், தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு) மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்துகொள்கின்றனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, கோட்டாட்சியா்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முருகன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ம.மலா்விழி மற்றும் வட்டாட்சியா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
