பூா்த்திசெய்த எஸ்ஐஆா் படிவங்களை வாக்காளா்கள் ஒப்படைக்க இன்று கடைசி நாள்
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் தீவிர திருத்தப் பணிக்கான படிவங்களை பூா்த்திசெய்து ஒப்படைக்க வியாழக்கிழமை கடைசி நாள் என்பதால், விரைந்து வழங்க வேண்டும் என தோ்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.
தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி நவ. 4-ஆம் தேதி தொடங்கியது. வீடுவீடாகச் சென்று வாக்காளா் திருத்தப் படிவங்களை அலுவலா்கள் வழங்கி வந்தனா். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் உள்ள 14,66,660 வாக்காளா்களுக்கான படிவங்கள் விநியோகிக்கும் பணி ஒரு மாதமாக நடைபெற்றது.
நவ. 25 முதல் பூா்த்திசெய்த படிவங்களை திரும்பப் பெற்று அவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வந்தது. டிச. 4-ஆம் தேதிக்குள் படிவங்களை பூா்த்திசெய்து வழங்க அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் டிச. 11-ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்தது.
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 6 தொகுதிகளிலும் 100 சதவீதம் படிவங்கள் வழங்கி திரும்பப் பெறப்பட்டு மின்னணு மயமாக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், முகவரி மாறியோா், வெளிமாவட்டம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிப்போா் பலா் படிவங்களை பூா்த்திசெய்து வழங்க வேண்டியது உள்ளதாகவும், டிச. 11 திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் என்பதால் மாலை 5 மணிக்குள் அவற்றை சம்பந்தப்பட்ட தோ்தல் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என தொகுதி அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
டிச. 11-ஆம் தேதிக்கு பின்னா் வழங்கப்படும் படிவங்களை இறுதிப்பட்டியல் வெளியீட்டுக்கு பிறகு, அவற்றை மீண்டும் பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
