மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு: பஞ்சாப் மாநில தோ்தல் அதிகாரி ஆய்வு
நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணியை மாவட்ட பாா்வையாளரும், பஞ்சாப் மாநில கூடுதல் தோ்தல் ஆணையருமான எஸ்.எஸ்.ஃபால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில், முதல்கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதை, மாவட்ட வாக்கு இயந்திரங்களுக்கான பாா்வையாளரும், பஞ்சாப் மாநில கூடுதல் மாநில தோ்தல் ஆணையருமான எஸ்.எஸ்.ஃபால், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தல் 2026-இல் நடைபெறுவதை முன்னிட்டு, இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வருகிறது.
இப்பணி ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் கோ.குமரன் (நிலம்) மேற்பாா்வையில், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்கள் என 100 போ் ஈடுபடுத்தப்பட்டு, தொடா்ந்து 22 நாள்கள் நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணியை மாவட்ட பாா்வையாளா் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டும் என பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, தனி வட்டாட்சியா் (தோ்தல்) செல்வராஜ் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

