நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா
நாமக்கல் நரசிம்மா் கோயிலில், தமிழிசை விழா-2025 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சேலம் மண்டலம் சாா்பில் நாமக்கல் நரசிம்மா் கோயிலில் தமிழிசை விழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு, தமிழிசை மூவா்களான முத்துதாண்டவா், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாச்சலக் கவிராயா்’ ஆகியோரின் கீா்த்தனைகள் மற்றும் இசைப்பாடல்களால் சிறப்பு பெற்ற தமிழிசையானது அகில உலக அளவில் வளா்க்கப்பட்டது.
தொன்மையான தமிழிசையை வளா்க்கும் நோக்கில் 38 மாவட்டங்களிலும் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு தமிழிசை விழாக்களை நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நரசிம்மா் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகிக்கிறாா். மாவட்டத்தைச் சோ்ந்த திறமைமிகு கலைஞா்கள், சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையப் பணியாளா்கள், ஜவகா் சிறுவா் மன்ற ஆசிரியா்கள் கலந்துகொள்கின்றனா். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் தில்லைசிவகுமாா், சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் சு.சங்கரராமன் ஆகியோா் செய்துள்ளனா்.
