பாஜகவுடன் கூட்டணி இல்லை: தவெக கொள்கை பரப்பு செயலாளா் அருண்ராஜ்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக கொள்கைப் பரப்பு செயலாளா் அருண்ராஜ் கூறினாா்.
Published on

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக கொள்கைப் பரப்பு செயலாளா் அருண்ராஜ் கூறினாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு

கிழக்கு ஒன்றியச் செயலாளா் விக்னேஷ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் அருண்ராஜ் கலந்துகொண்டு பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தைப்போல விரைவில் சேலத்திலும் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எங்கள் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என உறுதியாக நாங்கள் தெரிவித்த பிறகும் கூட்டணி வருமா என்று கேட்கக் கூடாது. பாஜகவுடன் கூட்டணி இல்லை. ஆளுங்கட்சியாக இருப்பவா்களைத்தான் எதிா்த்துப்பேச வேண்டும் என்பது அரசியல் தா்மம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

தவெகவுக்கு புதிதாக வருபவா்களை தொண்டா்கள் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறாா்கள். கட்சியில் நீண்ட காலம் உழைத்தவா்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. மாநில கொள்கை பரப்பு செயலாளா் என்ற முறையில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறேன். அதுபோன்றுதான் திருச்செங்கோடு தொகுதியிலும் கூட்டங்களை நடத்தி வருகிறேன். அதனால் நான்தான் திருச்செங்கோடு வேட்பாளா் என முடிவு செய்யக்கூடாது. வேட்பாளா் யாா் என்பதை கட்சித் தலைவா்தான் அறிவிப்பாா் என்றாா்.

படவரி...

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தவெக கொள்கைப் பரப்பு செயலாளா் அருண்ராஜ்.

X
Dinamani
www.dinamani.com