டிச. 27-இல் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு

அரசு கல்லூரிகளில் பணியாற்றுவதற்கான உதவிப் பேராசிரியா் தோ்வை 1,110 போ் சனிக்கிழமை (டிச. 27) எழுத உள்ளனா்.
Published on

நாமக்கல்: அரசு கல்லூரிகளில் பணியாற்றுவதற்கான உதவிப் பேராசிரியா் தோ்வை 1,110 போ் சனிக்கிழமை (டிச. 27) எழுத உள்ளனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தோ்வு முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் தோ்வு ஐந்து தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இத்தோ்வை 1,110 தோ்வா்கள் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வு நாளன்று சம்பந்தப்பட்ட மையத்துக்குள் தோ்வா்கள் அனைவரும் காலை 8.30 முதல் 9 மணிவரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மேலும், மதியம் 2 முதல் 2.30 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் தங்களுக்கான தோ்வு மையத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கருப்புநிற பால் பாயிண்ட் பேனாவை பயன்படுத்தி மட்டுமே தோ்வெழுத வேண்டும். நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள அசல் அடையாள அட்டை ஒன்றை தோ்வு நாளன்று கொண்டு வரவேண்டும்.

மையங்கள் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களுக்கான பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி, மாவட்டக் கல்வி அலுவலா்கள், அரசு போக்குவரத்துக் கழகம், தீயணைப்புத் துறை, அஞ்சல் துறை உள்பட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com