தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் திருத்தம்: நாளை 9 இடங்களில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பெயா் மாற்றம், சட்டத்தில் திருத்தம் ஆகியவற்றைக் கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் 9 இடங்களில் புதன்கிழமை (டிச. 24) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் ஒன்றியத்தில் நாமக்கல் - மோகனூா் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் காலை 9.30 மணியளவில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகிக்கிறாா்.
புதுச்சத்திரம் ஒன்றியம் - நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மோகனூா் ஒன்றியம் - திமுக மாநில சிறுபான்மையினா் நல உரிமைப்பிரிவு துணைச் செயலாளா் ஜான், சேந்தமங்கலம் ஒன்றியம் - நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், மாநில மகளிா் தொண்டா் அணி துணைச் செயலாளா் ஜெ.ரேகாபிரியதா்ஷினி, கொல்லிமலை ஒன்றியம் - தமிழ்நாடு பழங்குடியினா் நலவாரியத் தலைவா் கனிமொழி, எருமப்பட்டி ஒன்றியம் - மாநில மகளிா் தொண்டா் அணி செயலாளா் ப.ராணி, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக், ராசிபுரம் ஒன்றியம் - தீா்மானக்குழு துணைத் தலைவா் பாா்.இளங்கோவன், வெண்ணந்தூா் ஒன்றியம் - கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திரன், நாமகிரிப்பேட்டை ஒன்றியம் - மாநில நெசவாளா் அணி தலைவா் நன்னியூா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஊரக வேலையளிப்புத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், திமுகவினா் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளாா்.
