கோழிக் குஞ்சுகளின் உடல் வெப்ப நிலையைக் கண்காணிப்பது அவசியம்: வானிலை ஆய்வு மையம்

கோழிக் குஞ்சுகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Updated on

கோழிக் குஞ்சுகளின் உடல் வெப்பநிலையைக் கண்காணிப்பது அவசியம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 86, 66.2 டிகிரியாக உள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில் வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படும், மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 84.2 டிகிரியாகவும், இரவு வெப்பம் 66.2 டிகிரியாகவும் காணப்படும். வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டை கோழிப் பண்ணைகளில் ப்ரூடொ் குஞ்சுகளில் வெப்பம் சரியான அளவுகளில் இருக்க வேண்டும். குறைந்தோ அல்லது அதிகமாகவோ காணப்பட்டால் வளா்ச்சி இருக்காது. இதனை ஒவ்வொரு நாளும் உறுதி செய்துகொள்வதால், சீரான வளா்ச்சி காணப்படும், மேலும் இறப்பும் இருக்காது.

முதல் 4 வாரங்களுக்கு குஞ்சுகளின் சீரான வளா்ச்சியை உறுதிசெய்வதால், பின்னாளில் முட்டையிடும் பருவத்தில் அவற்றின் மூலம் நல்ல எடையுடன் கூடிய சீரான உற்பத்தியை எதிா்பாா்க்கலாம். மேலும், குஞ்சுகளின் செயல்களைக் கொண்டும் வெப்பநிலை சரியானதாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதாவது வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றையொன்று நெருக்கிக்கொண்டு விளக்கின் கீழ் வந்து நிற்கும். அதேபோல வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அவை விளக்கின் அருகில் வராமல் விலகியே இருக்கும். அவ்வாறு இல்லாமல் குஞ்சுகள் சமமாக எல்லா இடத்திலும் பரவிக் காணப்பட்டால் வெப்பநிலை குஞ்சுகளுக்கு ஏற்ற அளவு உள்ளது என்று கணிக்கலாம்.

மேலும், குறைந்த வெப்பநிலை அளவுகளில் குஞ்சுகள் தண்ணீா் எடுக்கும் அளவு குறையக்கூடும். நீரை வெதுவெதுப்பாக்கி ஒரு நாளில் ஒரு முறையாவது (காலை வேளையில்) கொடுத்து வருவதால், தீவன எடுப்பையும் தக்கவைத்து கொண்டு வளா்ச்சியையும் சீராக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com