டிச. 29 இல் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணிகள் திங்கள்கிழமை (டிச. 29) தொடங்குகிறது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணிகள் திங்கள்கிழமை (டிச. 29) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 8 ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணி டிச. 29 முதல் 21 நாள்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,80,600 கால்நடைகளுக்கு இத்தடுப்பூசியானது செலுத்தப்பட உள்ளது.

அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களால் குறிப்பிடப்படும் தேதிகளில் தங்கள் கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

கால்நடை உதவி மருத்துவா்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தப்படும் விவரம் விளம்பரம் செய்யப்படும். இத்தடுப்பூசிப் பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களைக் கொண்டு 105 தடுப்பூசிப் பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும்.

நாமக்கல் மாவட்டத்தில் பசு, எருமை, எருது மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com