நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை நிலம் கையகப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தனி மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணனிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட மூன்று கிராம விவசாயிகள், பொதுமக்கள்.
நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை நிலம் கையகப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தனி மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணனிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட மூன்று கிராம விவசாயிகள், பொதுமக்கள்.

நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: நாமக்கல்லில் சிப்காட் நிலம் எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

சிப்காட் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல்லில் சிப்காட் நிலம் எடுப்பு அலுவலகத்தை விவசாயிகள், பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
Published on

சிப்காட் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல்லில் சிப்காட் நிலம் எடுப்பு அலுவலகத்தை விவசாயிகள், பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டத்திற்கு உள்பட்ட வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா் ஆகிய மூன்று கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்காக 482.32 பட்டா நிலங்கள், 323.97 அரசு புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 806.29 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்திற்கு விவசாய முன்னேற்றக் கழகத்தினா், பொதுமக்களும், விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

நிலம் கையகப்படுத்தும் பகுதியில் உள்ள நீா்நிலைகள், விவசாயக் கிணறுகள், தடுப்பணைகள் ஆகியவற்றை வருவாய்த் துறை அதிகாரிகள் மறைத்து, தமிழக அரசுக்கு தவறான புள்ளிவிவரங்களை வழங்கி உள்ளதாகவும், அப்பகுதியில் விவசாயிகள், மக்கள் யாருமில்லாத வேளைகளில் மறைமுகமாக நிலம் அளவீடு பணி நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டி, நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணன், விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, நிலத்திற்கு உண்டான தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. புதிதாக பொறுப்பேற்று உள்ளதால் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என்றும், அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய தொகையை பெற்றுத்தர முயற்சிப்பதாக கூறினாா்.

நிலத்தை வழங்க நாங்கள் தயாராக இல்லை; சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் வேண்டாம் என்பதே எங்களுடைய நோக்கம். இதனையும் மீறி நிலம் கையகப்படுத்தினால் பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com