வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு: டிச. 27, 28 இல் சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்போருக்கான சிறப்பு முகாம் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் டிச. 19 இல் வரைவு வாக்காளா் பட்டியலானது வெளியிடப்பட்டது.
தொடா்ந்து நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, ,4 ஆகிய தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டுள்ள வாக்காளா்கள், 1.1.2026 தேதியில் 18 வயது பூா்த்தியடையும் புதிய வாக்காளா்கள் தங்களது பெயரைச் சோ்த்தல், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடா்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அளிக்கலாம்.
போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இருப்புவைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டுள்ளோா் மற்றும் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளா்களாக பதிவுசெய்து கொள்ள விரும்புவோா் அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், கோட்டாட்சியா் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
