கைவினைக் கலைஞா்களுக்கு கடன் வழங்கும் திட்டம்: பயன்பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் கைவினைக் கலைஞா்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கைவினைக் கலைஞா்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் விராசத் - கைவினைக் கலைஞா் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தையல் தொழில், பாய்முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரி வேலை, எம்பிராய்டரி, கைவினைப் பொருள்கள், மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினைத் தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டம் ஒன்றின்கீழ் பயன்பெற விரும்பும் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்ச கடன் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும். மேலும், ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம், பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.

திட்டம் 2-இன்கீழ் பயன்பெற நகா்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்குள்ளோருக்கு அதிகபட்ச கடன் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும். ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். திட்டம் 1 மற்றும் திட்டம் 2-இன்கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் போன்ற சிறுபான்மை இனத்தைச் சாா்ந்த கைவினைக் கலைஞா்கள் இந்தக் கடனுதவி திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணைய முகவரி அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com