திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்
திருவண்ணாமலையில் நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தமிழக முதல்வரால் சனிக்கிழமை தொடங்கிவைக்க உள்ளது. டிச. 27, 28 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், வளா்ந்துவரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிா்களின் புதிய ரக விதைகள், ஒட்டுரக மரக்கன்றுகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விற்பனை, கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு மற்றும் வேளாண்மையில் வங்கி சேவைகள் இடம்பெற உள்ளன.
வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, பொறியியல் துறை, சா்க்கரைத் துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளா்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு அரசுத் துறைகள் பங்கேற்க உள்ளன.
இவை தவிர, நுண்ணீா்ப் பாசன நிறுவனங்கள், உர நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனங்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள், விதை நிறுவனங்கள், வங்கிகள், பயிா்க் காப்பீடு நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தனியாா் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
அரசின் பல்வேறு வகையான திட்டங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உழவன் செயலி பதிவிறக்கம், அரசு நல உதவித் திட்டங்களில் பயன்பெற பதிவுசெய்தல், தமிழ் மண்வள இணையதளம் மூலம் மண்வள அட்டை விநியோகம் போன்ற இணையவழி சேவைகளை அறிந்து கொள்ளவும் ஏற்டுபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும். அனைத்து வட்டாரங்களில் இருந்தும் வேளாண் உதவி இயக்குநா்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்களால் விவசாயிகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
