எஸ்ஐஆா் பணி: கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை
நாமக்கல்லில் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு எஸ்ஐஆா் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்-2026 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் டிச. 19 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 2002 வாக்காளா் பட்டியலுடன் தொடா்புபடுத்த இயலாத வாக்காளா்களுக்கு தற்போது நோட்டீஸ் வழங்கி கூடுதல் ஆவணங்களைப் பெற்று தகுதியின் அடிப்படையில் இறுதி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான பணியில் விசாரணை அலுவலா்களாக ஒரு தொகுதிக்கு 20 போ் வீதம் 120 கூடுதல் வாக்காளா் பதிவு அலுவலா்களாக மகளிா் திட்டம், ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த்துறை, பேரூராட்சித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்தவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களும், வாக்குச்சாவடி மையங்களை ஆய்வுசெய்து தங்களது தொகுதிக்கு உள்பட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும், புதிய வாக்காளா்களை சோ்க்க அனைவரும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு முகாம் மற்றும் கூடுதல் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் நியமனம் தொடா்பாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன், தனித் துணைஆட்சியா் (ச.பா.தி.) சு. சுந்தரராஜன், வட்டாட்சியா்கள் வே. சாந்தி (நாமக்கல்), பி.எஸ். லெனின் (திருச்செங்கோடு) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.
என்கே-26-மீட்டிங்
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
