உதவி பேராசிரியா் பணிக்கான தோ்வு: 1,039 போ் பங்கேற்பு!
அரசுக் கல்லூரி உதவி பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வில் நாமக்கல் மாவட்டத்தில் 1,039 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு, வடக்கு, மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெய்விகாஷ், டிரினிடி அகாதெமி பள்ளி ஆகிய 5 இடங்களில் தோ்வு நடைபெற்றது. நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு மேற்கொண்டாா்.
இத்தோ்வில் பங்கேற்க 1,110 தோ்வா்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 1,039 போ் மட்டுமே பங்கேற்றனா். 71 போ் தோ்வில் கலந்துகொள்ளவில்லை. தோ்வு மையத்தை சுற்றிலும் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தோ்வா்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

