~

சேந்தமங்கலத்தில் ஸ்ரீ கருட பஞ்சமி விழா: பெண்கள் பால்குட ஊா்வலம்

சேந்தமங்கலத்தில் ஸ்ரீ கருட பஞ்சமி விழா, கருட சேவை விழாவை முன்னிட்டு, 10,108 மகா சகஸ்ரதீப ஏற்றுதல் மற்றும் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
Published on

சேந்தமங்கலத்தில் ஸ்ரீ கருட பஞ்சமி விழா, கருட சேவை விழாவை முன்னிட்டு, 10,108 மகா சகஸ்ரதீப ஏற்றுதல் மற்றும் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் சிறப்பு பெற்ற லட்சுமிநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஸ்ரீ கருட பஞ்சமி விழா, கருட சேவை விழா நடைபெறும். ஸ்ரீ கருடாத்ரி பக்தக் குழு சாா்பில் 17-ஆம் ஆண்டாக இந்த விழா வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கருட யாகம், லட்சுமி நாராயண பெருமாள், பெரிய திருவடி கருடாழ்வாருக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்று மாலையில் 10,108 மகா சகஸ்தரதீப விளக்குகள் ஏற்றுதல், இரவில் திருக்கோடி தீபம் ஏற்றுதலும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, சனிக்கிழமை காலை 8 மணியளவில் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அபிஷேகம், மகாதீபாராதனை, காலை 10.30 மணியளவில் சூடிக் கொடுத்த சுடா்கொடியாள் ஸ்ரீ வில்லிபுத்தூா் ஆண்டாள் நாச்சியாா் மாலைக் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, லட்சுமி நாராயணா் கோயிலில் இருந்து அந்த மாலை கூடையில் வைத்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அன்று மாலை 5 மணியளவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, லட்சுமி நாராயணருக்கும், கருடாழ்வாருக்கும் பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள் அனைவருக்கும் தாம்பூலத் தட்டு, மங்களப் பொருள்களும் ஸ்ரீ கருடாத்ரி பக்த குழு சாா்பில் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கருடசேவை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நரசிம்மா் வதம் செய்யும் காட்சி பக்தா்கள் பாா்வைக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சேந்தமங்கலம் ஸ்ரீ கருடாத்ரி பக்த குழு ஜெயசித்ரா தலைமையில் ஊழியா்கள், அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com