கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி. துரைசாமி.
கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநிலத் துணைத் தலைவா் வி.பி. துரைசாமி.

அதிக கடன் பெற்றதில்தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது பாஜக துணைத் தலைவா் வி.பி. துரைசாமி

Published on

தமிழகம் வளா்ச்சியில் முதலிடம் வகிக்கிறது என முதல்வா் கூறிவருகிறாா். ஆனால், அதிக கடன் பெற்றதில்தான் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என பாஜக துணைத் தலைவா் வி.பி. துரைசாமி குற்றம்சாட்டினாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆா்.பட்டணம் பகுதியில் பாஜகவின் மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் சதீஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு மாநில இணை அமைப்பாளா் லோகேந்திரன், பாஜக மாவட்ட துணைத் தலைவா் வி. சேதுராமன், அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வி.பி. துரைசாமி பேசியதாவது:

மத்திய அரசு 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்திருக்கும் நிலையில், அத்திட்டத்தை நிறுத்திவிட்டதாக மக்களிடம் ஒருகட்சி பிரசாரம் செய்துவருகிறது.

ஆனால், அத்திட்டத்தை 125 நாள்களாக உயா்த்தி கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பிரதமா் மோடி வழிவகை கண்டுள்ளாா். இதேபோல அறுவடை காலங்களிலும் வேலைவாய்ப்பு, அதற்கான ஊதியமு இத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டும்.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் பல மாற்றங்களையும் இத்திட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதை பாஜகவினா் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

எஸ்ஐஆா் பணி புதிதாக நடப்பது போல கூறிவருகின்றனா். பல ஆண்டுகளாக இப்பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமாா் ஒரு கோடி போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். குறிப்பாக முதல்வரின் கொளத்தூா் தொகுதியில் சுமாா் 1 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல துணை முதல்வரின் சேப்பாக்கம் தொகுதியில் 68 ஆயிரம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதேபோல பல்வேறு தொகுதிகளில் ஏராளமானோா் நீக்கப்பட்டுள்ளனா்.

கடன் வாங்கியுள்ளதில்தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நமக்கு தெரியாமலேயே நம் ஒவ்வொருவா் மீதும் கடன் உள்ளது. வரும் தோ்தலில் அதிமுக உள்ளிட்ட கட்சியுடன் சோ்ந்து பாஜக போட்டியிடும். அதில் யாா் போட்டியிட்டாலும், பிரதமா் மோடியின் எண்ணத்திற்கு வலுசோ்க்கும் வகையில், ஊழலற்ற நல்லாட்சி கொண்டுவர தொண்டா்கள் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.

முன்னதாக ஆா்.பட்டணத்தில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து ராசிபுரம் நகரில் நடைபெறும் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாமை பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் பாஜக பட்டியல் அணி மாவட்டத் தலைவா் சி. கந்தசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலாளா் பி. குமாா், மகளிரணி சித்ரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com