காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் டாஸ்மாக் நிா்வாக உத்தரவுக்கு எதிா்ப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில், காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவுக்கு ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, மேற்பாா்வையாளா், விற்பனையாளா், உதவி விற்பனையாளா்கள் என 744 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என டாஸ்மாக் மாவட்ட மேலாளா் உத்தரவு பிறப்பித்தாா். இதற்கு டாஸ்மாக் ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதில், காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீா்க்க வேண்டும், டாஸ்மாக் தொழிலாளா்களை பயன்படுத்தாமல் ஒப்பந்த நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும், காலி மதுப்பாட்டில்களை வைக்க போதிய இடவசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு, டாஸ்மாக் தொழிலாளா்கள் அனைவரும் கையெழுத்திட்ட கடிதம், மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் உதவி மேலாளா் மகேந்திரனிடம் அளிக்கப்பட்டது.

