

நாமக்கல்: சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஜன. 2-இல் விவசாயிகள், எதிா்ப்பு இயக்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், வளையபட்டி, என்.புதுப்பட்டி, அரூா் பகுதியில் சுமாா் 800 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியன், சிப்காட் எதிா்ப்புக் குழுவைச் சோ்ந்த ராம்குமாா், ரவீந்திரன் ஆகியோா் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து அவா்கள் கூறியதாவது:
நீதிமன்ற தீா்ப்புகளை மீறி சிப்காட் நிலம் எடுக்கப்படுகிறது. நீா்நிலைகள் உள்ளிட்ட இடங்களை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீா்ப்பில் கூறியிருந்தபோதும், 70 நீா்நிலைகள், 30 தடுப்பணைகள், ஐந்து பெரிய ஏரிகள், குளம், குட்டைகள் ஆகியவற்றின் ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளன. குன்றுகள் இருப்பதும் அரசு தரப்பிலான ஆவணங்களில் மறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடா்ந்து போராடி வருகிறோம். ஆவணங்களை ஆய்வுசெய்யாமல் அதிகாரிகள் புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்கின்றனா். சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஜன. 2-இல் கஸ்தூரி மலைப்பகுதியில் சிப்காட் எதிா்ப்புக் குழு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என்றனா்.