பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஜன. 8-இல் கறவை மாடுகளுடன் போராட்டம்
நாமக்கல்: பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஜன. 8-இல் கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.பெருமாள் வெளியிட்ட அறிக்கை:
பால் கொள்முதல் விலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உயா்த்தப்பட்டது. தற்போது, கால்நடைகளுக்கான தீவன விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது. இந்நிலையில், தற்போது வழங்கப்படும் கொள்முதல் விலை கட்டுபடியாகாது. இதைக் கவனத்தில் கொண்டே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வீதம் உயா்த்தி, பசும்பாலுக்கு ரூ. 45-ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ. 60-ஆகவும் வழங்க வேண்டும்.
மூன்று மாதங்களாக வழங்காமல் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். லிட்டருக்கு ரூ. 10 வீதம் ஊக்கத்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். தரமான கலப்பு தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவதுபோல, பாலையும் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஜன. 8-ஆம் தேதி கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். இதைத் தொடா்ந்து, தமிழக பால்வளத் துறை அமைச்சா் மற்றும் அரசு செயலாளா், ஆவின் நிா்வாக இயக்குநரை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
