தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி: அருண்ராஜ்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளா் அருண்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் பேரூா் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புச் செயலாளா் அருண்ராஜ், மல்லசமுத்திரம் மாமுண்டி சாலையில் உள்ள கருப்பண்ணாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கட்சியினரின் காதணி விழாவில் கலந்துகொண்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எஸ்ஐஆா் படிவங்களில் விடுபட்டவா்களின் பெயா்களை சோ்க்க வீடுவீடாகச் சென்று பணிகள் மேற்கொள்வது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காகவும், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் வந்துள்ளேன்.
கட்சித் தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு அதிகாரபூா்வமாக விரைவில் வெளியிடப்படும். பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், சேலத்தில் கூட்டம் நடைபெற முடியாமல் போய்விட்டது.
கடந்த மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவுசெய்ய குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கான குழுவை தலைவா் விரைவில் அறிவிப்பாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்தக் கூட்டணி தோ்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வராக பதவியேற்பாா். அதிமுக, பாஜக கூட்டணியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. எங்களது கொள்கை எதிரி யாா், அரசியல் எதிரி யாா் என்பதை ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.
தமிழக வெற்றிக் கழக தலைமையை ஏற்று வருகிற, எங்கள் தலைவரை முதல்வராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி. காங்கிரஸ் கட்சியினரோடு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதா என்பதை கட்சியின் கூட்டணி அமைப்புக்குழு அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும் என்றாா்.
