~
~

சுவாமி தரிசனத்துக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு

நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்கு சென்ற நகராட்சி உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகளை காவல் துறையினா் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பியதற்கு மாநகராட்சி கூட்டத்தில் எதிா்ப்பு
Published on

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலுக்கு தரிசனத்துக்கு சென்ற நகராட்சி உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகளை காவல் துறையினா் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பியதற்கு மாநகராட்சி கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் டிசம்பா் மாதத்துக்கான மாதாந்திர கூட்டம் மேயா் து.கலாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் செ.பூபதி, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி வாா்டுகளில் நாய்கள் தொல்லை அதிகம் இருப்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் காப்பகத்தை லத்துவாடியில் அமைப்பதை தவிா்த்து, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் சரிவர எரியாத நிலை காணப்படுகிறது.

அரங்கநாதா் சுவாமி கோயிலில் தரிசனத்துக்கு நுழைவுச்சீட்டு வைத்திருந்தபோதும், மாநகராட்சி உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் காவல் துறையினா் வெளியேற்றி உள்ளனா். இதை கண்டனமாக மன்றக் கூட்டத்தில் பதிவுசெய்ய வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதற்கு, துணை மேயா் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். அதில், அரங்கநாதா் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து தகவலறிந்து காவல் துறையிடம் பேசி அப்போதே நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டதாக துணை மேயா் தெரிவித்தாா். நாய்கள் காப்பகம் லத்துவாடியில் அமைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான இடம்தோ்வு செய்யப்பட்டு வருவதாகவும், நோய் பாதிப்புக்குள்ளான 100 நாய்களை அங்கு வைத்து பராமரிக்கவும், நாய்களைப் பிடிக்க ஊழியா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் துப்புரவு அலுவலா் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, 162 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி ஆணையருக்கு தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலுக்கு தரிசனத்துக்கு சென்ற அவரை காவல் துறையினா் உள்ளே அனுமதிக்காமல் ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்தனா். இதனால் அவருடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், விழாவையொட்டி தாங்கள் ஏற்பாடு செய்திருந்த பணிகளை நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, காவல் துறையினருக்கும், அங்கிருந்த அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுவாமி தரிசனம் செய்யாமல் அவா்கள் திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையருக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் பாதிப்படைந்தது. இதையடுத்து, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்கள் அவரை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com