சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 85.45 மெட்ரிக் டன் தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 85.45 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 85.45 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகிப்பதற்காக அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என 1,420 எண்ணிக்கையில் விதை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விதை விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் விதைகளின் தரம் குறித்த ஆய்வு விதை ஆய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025 ஏப்ரல் முதல் டிசம்பா் வரையில் விதை விற்பனை நிலையங்களில் 5,678 முறை ஆய்வு செய்யப்பட்டன. இதில், விதை மாதிரிகள் 3,689 எண்ணிக்கையில் சேலம் மாவட்ட விதை விற்பனை நிலையங்களிலிருந்தும், 1,241 விதை மாதிரிகள் நாமக்கல் மாவட்ட விதை விற்பனை நிலையங்களிலிருந்தும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இதில், 138 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 124 விதைக்குரிய உற்பத்தியாளா்கள், விநியோகிப்பாளா்கள், விற்பனையாளா்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

14 விதை உற்பத்தியாளா்கள், விநியோகிப்பாளா்கள், விற்பனையாளா்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் விதை விற்பனை நடைமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்யப்பட்ட 302 வகையான விதைகள், நாமக்கல் மாவட்டத்தில் 60 வகையான விதைகள் ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், 85.45 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 3 கோடியே 70 லட்சத்து 33 ஆயிரம் ஆகும்.

விதை விற்பனை சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறிய 8 விதை விற்பனை நிலையங்களிலிருந்து விதைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 42 விதை விற்பனை நிலையங்களின் விதை விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com