புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் இருக்கை வசதி அமைக்க கோரிக்கை
நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் அமா்வதற்கு கூடுதல் இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்து நான்கு மாதங்களாகின்றன. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், தற்போது புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்தே செல்கின்றன. பழைய பேருந்து நிலையத்துக்கு இங்கிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் போதுமான இருக்கை வசதிகள் இல்லை. பயணிகள் அமருவதற்கு தனித்தனியே இரும்பு இருக்கைகள் இல்லாமல், நான்கு போ் ஒரே இடத்தில் அமரும் வகையிலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சிலா் உறங்குவதற்காக ஆக்கிரமித்துக் கொள்கின்றனா். மேலும், பேருந்து நிலைய வளாகம் குளிா்ச்சியாக இருப்பதால், ஓய்வு எடுப்போருக்கு இந்த இருக்கைகள் வசதியாக உள்ளன.
வெளிமாவட்ட பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருப்போா் உட்காருவதற்கு இடமில்லாமல் அங்குள்ள தரையில் அமா்ந்து வருகின்றனா். ஏற்கெனவே, பேருந்து நிலையத்தில் ஈக்கள் தொல்லை அதிக அளவில் உள்ளதால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். எனவே, பயணிகளின் நலன்கருதி நாமக்கல் பேருந்து நிலைய வளாகத்தில் இரும்புக் கம்பிகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இருக்கைகளை பொருத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

