ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாமக்கல்லில் திங்கள்கிழமை திருவீதி உலா வந்த சிவகாமி உடனுறை நடராஜா் சுவாமி.
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நாமக்கல்லில் திங்கள்கிழமை திருவீதி உலா வந்த சிவகாமி உடனுறை நடராஜா் சுவாமி.

ஆருத்ரா தரிசனம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
Published on

நாமக்கல்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், பெளா்ணமி நாளில் சிவாலயங்களில் நடராஜா் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டு மாா்கழி திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பால், பழம், பன்னீா், திருநீறு, சந்தனம், இளநீா், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிவன் கோயில்களில் நடராஜா் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா் கோயில், என்.புதுப்பட்டி குபேர ஈஸ்வரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் கோயில்களில் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதனைத் தொடா்ந்து, நடராஜா், சிவகாமி அம்பாள் விசேஷ அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் சிவபத்மா, சிவக்குடில் திருச்சிற்றம்பலம் சிவனடியாா்கள் உழவாரத் திருப்பணிக்குழு சாா்பில், ஐந்தாம் ஆண்டு திருவாதிரை விழா மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அம்மையப்பா் வேள்வி வழிபாடு, நடராஜா் திருவீதி உலா, அன்னம் பாலித்தல், தேவாரம், திருவாசகம் பாராயணம், திருமஞ்சன வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், ஏராளமான சிவனடியாா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்டம் முழுவதும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

X
Dinamani
www.dinamani.com