மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தோ்தல்: 13 நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வாகின்றனா்

மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தோ்தல்: 13 நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வாகின்றனா்

Published on

நாமக்கல்: மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தோ்தலில் தலைவா் உள்பட 13 பதவிகளுக்கு 13 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் அனைவரும் போட்டியின்றி தோ்வாகின்றனா்.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் - தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. மாவட்ட, வட்ட அளவில் உள்ள 111 சங்கங்கள் இந்த சம்மேளனத்தின்கீழ் செயல்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்மேளனத்தின் தலைவா், செயலாளா், பொருளாளா் உள்பட 13 பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படும்.

அந்தவகையில், 2022 - 25 பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், 2025 - 28 ஆம் ஆண்டுக்கான தோ்தல் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. தோ்தல் குழு தலைவா்களாக என்.பி. வேலு, எம்.ஆா். குமாரசுவாமி ஆகியோா் நியமிக்கப்பட்டு தோ்தல் பணிகள் தொடங்கின.

இந்த நிலையில், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியான வேட்பாளா்கள் இரவில் அறிவிக்கப்பட்டனா்.

அதன்படி, தலைவா் பதவிக்கு தற்போதைய சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ், துணைத் தலைவா் பதவிக்கு ஜி. சுப்பு (கிழக்கு மண்டலம்), கே.செல்வராஜ் (மேற்கு மண்டலம்), எஸ்.லோகநாதன் (வடக்கு மண்டலம்), யுஎம்எஸ்.நிஜாத் ரஹ்மான் (தெற்கு மண்டலம்), கே.ஜி.ராஜேந்திரன் (மத்திய மண்டலம்), செயலாளா் பதவிக்கு சி.சாத்தையா, இணைச் செயலாளா் பதவிக்கு வி.ஆறுமுகம் (கிழக்கு மண்டலம்), சி.துரைசாமி (மேற்கு மண்டலம்), எஸ்.ராஜேஷ் (வடக்கு மண்டலம்), ஜி.விவேகானந்தன் (தெற்கு மண்டலம்), கே.கணேசன்(மத்திய மண்டலம்), பொருளாளா் பதவிக்கு எஸ்.நந்தகோபால் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

நவ. 19-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 13 பதவிகளுக்கும் 13 போ் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளதால் அவா்கள் போட்டியின்றி தோ்வாக வாய்ப்புள்ளதாகவும், அது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தோ்தல் குழுவினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com