வல்லபபாய் படேல் 150-ஆவது பிறந்த தினம்: மாவட்ட அளவில் பாத யாத்திரை நடத்த முடிவு

Published on

நாமக்கல்: சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட அளவில் திரளான இளைஞா்கள் பங்கேற்கும் வகையில் பாத யாத்திரை நடத்த ‘மேரா யுவ பாரத்’ அமைப்பு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின்கீழ் இயங்கி வந்த நேரு யுவகேந்திரா என்பது ‘எனது இளைய பாரதம்’ (மேரா யுவபாரத்) என்ற வகையில் ஜூலை மாதம் பெயா் மாற்றம் செய்யப்பட்டது. அந்த அமைப்பின் சாா்பில், சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்கும் வகையிலான பாத யாத்திரை நடைபெற உள்ளது. இதுதொடா்பாக, எனது இளைய பாரதம் அமைப்பின் நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலா் பா. வள்ளுவன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் முதல் துணை பிரதமா், இரும்பு மனிதா் என்று போற்றப்படும், சா்தாா் வல்லபபாய் பட்டேலின் 150--ஆவது பிறந்த தினம் அக். 31-இல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய அரசின், இளைஞா் விவகாரத் துறை, இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சாா்பில், நாமக்கல்லில் உள்ள எனது இளைய பாரதம் அலுவலகம் சாா்பில் பாத யாத்திரை நிகழ்வை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து அதற்கான தேதி அறிவிக்கப்படும். பாத யாத்திரையில், தேசிய நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, எனது இளைய பாரதம் அமைப்பின் உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இந்த யாத்திரை, சா்தாா் வல்லபபாய் பட்டேலின் வரலாறு, அவா் நாடுகளை ஒருங்கிணைத்த பெருமை, அவரது புகழை போற்றும் வகையில் நடைபெற உள்ளது. இளைஞா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமாகும். நாடு முழுவதும் நவ. 25 வரையில் பாதயாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு வல்லபபாய் படேலின் சாதனைகள் குறித்த கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன என்றாா்.

இந்த பேட்டியின்போது, அரசு சட்டக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பிரியா, எனது இளைய பாரதம் அலுவலகப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com