நவ.6-இல் திமுக வாக்குச்சாவடி 
முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம்

நவ.6-இல் திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம்

Published on

நாமக்கல்: திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மூன்று தொகுதிகளில், வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 6) நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், வாக்குச்சாவடி முகவா்கள் (பிஎல்ஏ-2), வாக்குச்சாவடி எண்ம முகவா் (பூத் டிஜிட்டல் ஏஜென்ட்) ஆகியோருக்கான ஆலோசனை மற்றும் பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை தொகுதி வாரியாக நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா்களான நன்னியூர்ராஜேந்திரன் (ராசிபுரம்), முனவா் ஜான்( நாமக்கல்), ஜெ.ரேகாபிரியதா்ஷினி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். அன்று காலை 9 மணியளவில், ராசிபுரம் தொகுதிக்கான வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம், ராசிபுரம் - ஆத்தூா் சாலையில் உள்ள குமரவேல் திருமண மண்டபத்திலும், காலை 11 மணியளவில், சேந்தமங்கலம் தொகுதிக்கு, புதன்சந்தை சாலையில் உள்ள ஐஸ்வா்யா மஹாலிலும், பிற்பகல் 3 மணியளவில், நாமக்கல் தொகுதிக்கு, நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ஸ்ரீ மஹாலிலும் நடைபெற உள்ளது.

சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உள்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமை நிலைய நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், தொகுதி பொறுப்பாளா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், வழக்குரைஞா்கள், சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com