குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

Published on

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலைக்கு தடையின்மை சான்று வழங்குவது தொடா்பாக ஆலை வளாகத்தை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து, பள்ளிபாளையம் ஒன்றியம், தட்டாங்குட்டை ஊராட்சியில் தூய்மைப் பாரத இயக்கம் சாா்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ. 21.55 லட்சத்தில் இயற்கை உரம் தயாரிப்புக் கூடம் அமைத்து, உரம் தயாரிக்கும் பணியைப் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்ற ஆட்சியா், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். தட்டாங்குட்டை ஊராட்சி ஓலப்பாளையம் மயானப் பணியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தமிழக முதல்வரால் புதன்கிழமை திறந்துவைக்கப்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com