பரமத்தி வேலூரில் ரூ.3.64 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 64 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் தேங்காய் ஏலத்துக்கு சோழசிராமணி, ஜேடா்பாளையம், கபிலா்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணாநகா், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னை விவசாயிகள் தேங்காயை கொண்டு வருகின்றனா்.
தேங்காய்களை ஏலம் எடுக்க நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரத்து 975 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.66.10, குறைந்தபட்சமாக ரூ. 53.50, சராசரியாக ரூ. 60.40-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 9 ஆயிரத்து 382 -க்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5 ஆயிரத்து 525 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 70.60, குறைந்தபட்சமாக ரூ. 55.79- க்கும், சராசரியாக ரூ. 65.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 64 ஆயிரத்து 594- க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
