திருச்செங்கோட்டில் ரூ.23 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை: காணொலி வாயிலாக திறந்துவைத்தாா் முதல்வா்

Published on

திருச்செங்கோட்டில் ரூ. 23 கோடியில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் துா்க்கா மூா்த்தி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு மருத்துவமனயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மக்கள் நலன்கருதி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்த ஆணையிட்டு ரூ. 23 கோடி நிதியை முதல்வா் ஒதுக்கீடு செய்தாா். அதனடிப்படையில் தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் கூடிய கட்டடம் 64,347 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் 8 படுக்கைகள் கொண்ட தலைக்காய சிகிச்சைப் பிரிவு, மருந்தகம், தொற்றாநோய் பிரிவு, மருத்துவா் அறை, 2 மின்னாக்கிகள், முதல்தளத்தில் அறுவை சிகிச்சைக்கு முன் கவனிப்பு, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் காப்பீட்டுப் பிரிவு, எக்ஸ்ரே, ஆய்வகம், நுண்கதிா், இரண்டம் தளத்தில், காது, மூக்கு, தொண்டை பிரிவு, பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவு, மருத்துவா் அறை, செவிலியா் அறை, மூன்றாவது தளத்தில் குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவ அறை, பிரசவத்திற்குப் பிந்தைய பிரிவு, ஸ்கேன் அறை, பிரசவத்திற்கான அவசரச் சிகிச்சை பிரிவு, நான்காவது தளத்தில், அறுவை அரங்கம், மயக்கவியியல், செவிலியா் அறை ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படுக்கை வசதிகள் 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே ரூ. 2.33 கோடியில் சி.டி.ஸ்கேன் கருவி, சி.ஆா்.எம். கருவிகள் திறந்துவைக்கப்பட்டன. இதன் மூலம் மாதம் 400 சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரூ.1 கோடி செலவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 97.90 லட்சம் மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ. 9 லட்சத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு பிரிவுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, நகா்மன்றத் துணைத் தலைவா் தி.காா்த்திகேயன், அட்மா குழுத் தலைவா் தங்கவேல், இணை இயக்குநா் (நலப் பணிகள்) அ.ராஜ்மோகன், நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கி.சாந்தா அருள்மொழி, தலைமை மருத்துவ அலுவலா் எம்.மோகன பானு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com