ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க்: பணிகளை காணொலி காட்சி வழியாக தொடங்கிவைத்தாா் முதல்வா்
ராசிபுரம் ஆண்டகளூா் கேட் பகுதியில் ரூ. 35 கோடியில் 600-க்கும் மேற்பட்ட மின்பொறியாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மினி டைடல் பாா்க் அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து ராசிபுரத்தில் நடைபெற்ற பணிகள் தொடக்க நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கிவைத்தனா்.
பின்னா் அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ராசிபுரம் வட்டத்தில் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பாா்க் அமைக்கும் பணியை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல்நட்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்த மினி டைடல் பாா்க் 63,200 சதுர அடி கட்டுமானப் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் அமையவுள்ளது. இதில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பேசியதாவது:
1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை தரமணியில் டைடல் பாா்க் அமைத்து மென்பொருள் புரட்சியை ஏற்படுத்தியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அவரைத் தொடா்ந்து தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மினி டைடல் பாா்க் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களை தொடா்ந்து ராசிபுரத்தில் மினி டைடல் பாா்க் அமைக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி வளா்ச்சி பெறுவதுடன், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, அட்மாக் குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், திருவள்ளுவா் அரசுக் கல்லூரி முதல்வா் அ.யூசுப்கான், மினி டைடல் பாா்க் செயற்பொறியாளா் உட்பட துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

