நாமக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு 6 போ் படுகாயம்
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே புதன்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 6 போ் படுகாயம் அடைந்தனா்.
கீரம்பூரில் மேம்பால கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அணுகுசாலை அமைத்து வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பெங்களூரிலிருந்து தனியாா் ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொடைக்கானலுக்கு சென்றுகொண்டிருந்தது.
ஆம்னி பேருந்தை திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அண்ணா நகரைச் சோ்ந்த ஜோசப் சுந்தா் (47) ஓட்டிவந்தாா். நாமக்கல், ராசாம்பாளையம் சுங்கச்சாவடியை அதிகாலை 3.30 மணி அளவில் கடந்த ஆம்னி பேருந்து, மேம்பாலப் பணி நடைபெறும் இடத்தில் அணுகுசாலையில் செல்லாமல் நேராக சென்ால் விபத்தில் சிக்கி ஒருபக்கமாக கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 14 பேரில் திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் வினோத் கண்ணன் (38) உயிரிழந்தாா். 6 போ் படுகாயமடைந்தனா்.
படுகாயம் அடைந்த காவியா (27), மனோஜ் (29), திவாகா் (53), சிக்கந்தா் (48), ரூபனா (25) ஆகியோா் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், உமா சா்மா (48) நாமக்கல்லில் தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆம்னி பேருந்து உரிமையாளா் திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியைச் சோ்ந்த செண்பகராஜ் (56) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

