சின்னமுதலைப்பட்டியில் ரூ. 81 லட்சத்தில் பூங்கா திறப்பு
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு சின்னமுதலைப்பட்டி காமராஜா் நகரில் ரூ. 81 லட்சத்தில் குழந்தைகளுக்கான பூங்காவை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா், மாமன்ற உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் சிறியவா்கள், பெரியவா்கள் நடைபயிற்சி செய்வதற்கான வசதிகளும், விளையாடுவதற்கான சறுக்கல், ஊஞ்சல், சீசா, சிறுராட்டினம், பொம்மை விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
உடற்பயிற்சி செய்வதற்கான கருவிகளும், ஓய்வுக்கான இருக்கை வசதிகளும் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலை 5.30 முதல் காலை 9 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை பூங்கா திறந்திருக்கும். குடிநீா் வசதி, ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியே கழிவறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காவை பொதுமக்கள், சிறுவா், சிறுமிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பூங்காவை பொதுமக்கள் தூய்மையாகப் பராமரித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுபோன்ற பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பொதுமக்களிடையே தெரிவித்தாா்.
இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
