தனியாா் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

பரமத்திவேலூரில் தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

பரமத்திவேலூரில் தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (62). இவா் பரமத்தி வேலூரில் உள்ள தனியாா் மரம் அறுக்கும் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இவரது மனைவி அம்பிகா (55). இவா் வெங்கரை பேரூராட்சியில் துய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனா். கணேசன் வெள்ளிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு பரமத்தி வேலூரில் உள்ள மருமகன் வீட்டிற்கு பரமத்தி வேலூா் - நாமக்கல் பழைய நெடுஞ்சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தாா்.

வேலூா் பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா அருகே சென்ற போது பின்னால் வந்த தனியாா் பேருந்து கணேசன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தாா். இதைப் பாா்த்த அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com