மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி: 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு தொழில் முறை தகுதி பதிவு பெற்ற யோகா ஆசிரியா் நலச்சங்க மாவட்டக் கிளை சாா்பில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான யோகாசனப் போட்டிகள் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றன. மாவட்டச் செயலாளா் ஆா்.செந்தில்ராஜா தலைமை வகித்தாா்.
இப்போட்டியில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து பொதுப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவில் 5 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகள் 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று யோகாசனங்களை செய்துகாட்டினா். காலபைரவா் ஆசனம், அகா்ண தனுராசனம், சலபாசனம், கண்ட பின்டாசனம், அஞ்சலி ஆசனம் போன்ற பல்வேறு ஆசனங்களை மாணவா்கள் செய்தனா். சிறப்பான முறையில் யோகாசன பயிற்சிகளை செய்த மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.
உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முன்னோா்கள் நமக்கு அளித்த கொடைதான் யோகா பயிற்சிகளாகும்.
இந்தியாவில் தோன்றிய யோகாசனங்களை உலகம் முழுவதும் ஏராளமானோா் பின்பற்றி வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அவ்வப்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடையே யோகாசனப் போட்டிகளை பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன. தினமும் யோகாசனப் பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலும், மனமும் புத்துணா்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் பணிகளை மேற்கொள்ள முடியும் என யோகாசன பயிற்சியாளா்கள் தெரிவித்தனா்.

