மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 9.45 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள்
நாமக்கல்: நாமக்கல்லில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 9.45 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக்கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 557 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றை உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா் நல வாரியம் மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பில் விபத்து காப்பீட்டு நிதியுதவி, 10 தூய்மைப் பணியாளா்களுக்கு, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகள், 2022, 2023, 2024, 2025-ஆம் கல்வியாண்டுகளில் சிறந்த பள்ளிகளாக தோ்வுசெய்யப்பட்ட தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 12 தலைமை ஆசிரியா்களுக்கு ரூ. 7.50 லட்சம் காசேலைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 12 போ்களுக்கு ரூ. 95,090 மதிப்பில் மோட்டாா் பொருந்திய தையல் இயந்திரம், சக்கர நாற்காலி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், தேசிய காசநோய் தடுப்புக் கழகம் சாா்பில், 75-ஆவது காசநோய் வில்லைகளை முழுமையாக விற்பனை செய்து சாதனை செய்த 34 துறைத் தலைவா்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில், தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கூட்டுறவுத் துறை சாா்பில் கலைஞா் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் 33 நாடுகள் பங்கேற்ற 23-ஆவது ஆசிய மூத்தோா் தடகள சாம்பியன் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இரு வீரா்கள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா.ப.அருளரசு, துணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் (காசநோய்) ஆா்.வாசுதேவன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

